என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி மாநகரத்தில் மெட்ரோ ரெயிலுக்கு இணையாக புதிய போக்குவரத்து திட்டம்
- மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரி விளக்கம்
- மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் ஆகிறது
திருச்சி,
திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
அம்பிகாபதி (அ.தி.மு.க.): எனது வார்டுக்கு உட்பட்ட வயர்லெஸ் ரோடு முஸ்லிம் தெரு, மாரியம்மன் தெரு, அழகர் தெரு உள்ளிட்ட இடங்களில் 40-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பொதுமக்கள் மனைகளை கிரையம் செய்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திடீரென அந்த நிலம் காலரா கேம்ப் நிலம், அதனை மீண்டும் பத்திரப்பதிவு செய்ய இயலாது என அரசாணை வந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆகவே இதுகுறித்து மாநகராட்சி மூலமாக மாவட்ட நிர்வாகி அதிகாரிக்கு தெரிவித்து கிரயம் செய்ய அனுமதி பெற வேண்டும்
மேயர் அன்பழகன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரெக்ஸ் (காங்.): எனது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர் விரிவாக்க பகுதியில் குடிநீர் வராமலேயே மக்கள் வரி செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே மேற்கண்ட பாலாஜி நகர் விரிவாக்கம் வின் நகர் அண்ணா நகர் பகுதி மக்கள் பயன்படும் வகையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும்.
சாதிக் பாட்ஷா (தி.மு.க.): தற்போது எனது வார்டுக்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடக்கிறது. இதனால் கம்பரசம்பேட்டையில் இருந்து இங்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேட்டுப்பகுதியாக இருக்கின்ற காரணத்தால் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. ஆகவே சுண்ணாம்புக்கார தெரு, சௌந்தரபாண்டியன் தெரு, மேல காசிபாளையம், சம்சுரான் ரோடு ஆகிய பகுதிகளுக்கு கூடுதலாக ஒன்றரை மணி நேரம் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.
சிங்காரத்தோப்பு பகுதியைப் போன்று ஜாபர் சார் தெரு, வெள்ளை வெற்றிலை காரர் தெரு பகுதிகளிலும் வர்த்தக நிறுவனங்களை மூடிவிட்டு துரிதமாக பாதாள சாக்கடை பணிகளை தொடங்கி சாலைகளை போட வேண்டும். கொடுமல் பிரசவ ஆஸ்பத்திரியை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும்.
எல்.ஐ.சி.சங்கர் (சுயேட்சை): கோடை காலம் தொடங்கி விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் கூடுதலாக ஒரு மணி நேரம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோடை காலத்தில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் குளிக்கும் வகையில் சம்மர் பீச் திருவரங்கம் காவிரி ஆற்றில் அமைக்க வேண்டும்.
காஜாமலை விஜி (தி.மு.க.): எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. கொசு மருந்தின் தரத்தினை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
மேயர்: மாநகர சுகாதார அலுவலர் மூலம் மருந்தின் தரம் ஆய்வு செய்யப்படும்.
இதையடுத்து மேயர் மு.அன்பழகன் பேசுயைில், இந்த மாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் அடுத்த 20 ஆண்டுகளுக்கான சாலை பொது போக்குவரத்து, மோட்டார் அல்லாத போக்கு வரத்துமேம்பாடுகள் இயக்கம் மற்றும் சரக்கு போக்குவரத்து மேலாண்மை, திட்டங்கள் கொண்டு பல்வேறு போக்குவரத்து திட்டங்கள் குறித்த ஆய்வு அறிக்கை தொடர்பாக கவுன்சிலர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
இதில் சமயபுரம் முதல் வயலூர் வரையிலும், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலும், திருச்சி ஏர்போர்ட் வழியாக பஞ்சபூர் வரையிலும், மெட்ரோ ெரயில் போன்று பூமிக்கு அடியிலோ அல்லது பறக்கும் சாலை திட்டத்தின் படியோ புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஆய்வுகளுக்கு பின்னர் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் அனுமதி பெற்று புதிய பொது போக்குவரத்து திட்டங்கள் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி): அம்பேத்கர் எழுதிய நூல்களை தமிழில் மொழி பெயர்க்க ரூ.ஐந்து கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை. மேலும் எனது வாடுக்கு உட்பட்ட இ.பி.ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய லாரி டெர்மினல் டெண்டர் தொகை அதிகமாக இருப்பதால் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. ஆகவே அந்தத் தொகையினை குறைத்து நிர்ணயிக்க வேண்டும். இ.பி.ரோடு பகுதியில் கனரக வாகனங்கள் மற்றும் கண்டெய்னர்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.
இதற்கிடையே 2023-24 ஆம் ஆண்டுக்கான திருச்சி மாநகராட்சி பட்ஜெட் (நிதி நிலை அறிக்கை) தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.






