என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீண்டும் கிடுகிடுவென உயரத்தொடங்கும் தக்காளி விலை: கோயம்பேடு சந்தையில் இன்று ரூ.80-க்கு விற்பனை
- நேற்றுமுன்தினம் சற்று குறைந்த நிலையில் தற்போது அதிகரிப்பு
- சில்லறை விலையில் 100-ஐ தாண்டி விற்பனை
சென்னை கோயம்பேடு, மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்கப்பட்டது. மேலும் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளியின் விலை நேற்று முன்தினம் சற்று குறைந்தது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ100-க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெளி மார்க்கெட்டுகளில் 1 கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்துள்ளது. சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக தினசரி 65 லாரிகளில் 450 டன் வரை குவிந்து வரும் தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாகவே குறைந்துவிட்டது.
இன்று 40 லாரிகளில் 300 டன் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. 150 டன் தக்காளி குறைவாக வந்துள்ளது. உற்பத்தி நடைபெற்று வரும் பகுதிகளில் பெய்த மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை அதிகரித்து உள்ளது. இனி வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






