என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை கரும்பு தோட்டத்தில் பதுங்கிய 17 வயது சிறுவன் பிடிப்பட்டான்
- தூத்துக்குடியில் இருந்து வேலூருக்கு அைழத்து வந்தபோது தப்பி ஓட்டம்
- கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்
திருவண்ணாமலை:
தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவனை, கொலை வழக்கு ஒன்றில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் பிடித்து, திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறுவனுக்கு அங்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுவனை வேலுார் அரசினர் பாதுகாப்பு இல்லத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறுவனை தூத்துக்குடி ஆயுதப்படை போலீசார் அரசு பஸ்சில் நேற்று முன்தினம் அழைத்து வந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை டோல்கேட் அருகே வந்தபோது, திடீரென பஸ் பழுதடைந்து நின்றுவிட்டதாக கூறப் படுகிறது. இதனால், பஸ்சிலிருந்த பயணிகள் கீழே இறங்கியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திய சிறுவன், அங்கிருந்து தப்பி ஓடினான். இதைக்கண்டபோலீசார் விரட்டிச்சென்றனர். ஆனாலும், இரவுநேரம் என்பதால், சிறுவன் எந்தவழியாக தப்பினான் என கண்டுபிடிக்க முடியாமல் போனது.
இதுகுறித்து தூத்துக்குடி போலீசார் உடனடியாக திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரனுக்கு தகவல் தெரி வித்தனர்.
டிஎஸ்பி உத்தரவின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று தப்பியோடிய சிறுவனை தேடும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.
டோல்கேட் அருகே உள்ள கரும் புத்தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, துாத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து,சிறுவனை பாதுகாப்பாக வேலுாருக்கு அழைத்துச்சென்றனர்.