search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா, புகையிலை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- கலெக்டர் எச்சரிக்கை
    X

    குட்கா, புகையிலை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- கலெக்டர் எச்சரிக்கை

    • 2-வது முறையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18 கடைகள் அதிரடியாக மூடப்பட்டது.
    • குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவலர்களுடன் உணவு பாதுகாப்புத்துறை திருவள்ளுர் மாவட்ட நியமன அலுவலர் கலந்தாய்வு மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து திருவள்ளுர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக இந்த கூட்டாய்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வேனா கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது 32 கடைகளில் சுமார் 273 கிலோ தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    மேலும் ஏற்கனவே விற்பனை செய்து அபராதம் விதித்த போதும் 2-வது முறையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18 கடைகள் அதிரடியாக மூடப்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் பான்மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்கப்படுவதை கண்டறிந்தால் உடனடியாக நுகர்வோர் குறைதீர்ப்பு செயலியான Tnfood safety consumer app மற்றும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல், https://foscos.fssai.gov.in என்ற இணைய தளம் மற்றும் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்கள் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்

    மாவட்டம் முழுவதும் அதிலும் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து பள்ளிகளிலும் குட்கா, புகையிலையால் ஏற்படும் தீங்குகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பள்ளிகளில் தொடர்பு ஆசிரியர் ஒருவரை நியமித்து மாணவர்களின் பயன்பாட்டை கண்டறிந்து பள்ளிக்கு அருகில் புகையிலை விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், மற்றும் பயணவழி உணவகங்களில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமாக உணவு வழங்குதலை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    Next Story
    ×