search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிவுக்கு வராத நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணி-சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்
    X

    2 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிவுக்கு வராத நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணி-சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்

    • நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் 36 மாதங்களை கடந்தும் நடைபெற்று வருகிறது.
    • போதுமான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் காரசார விவாதங்கள் நடைபெற்றது.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

    நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் இந்த மாதத்தில் முடியும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் இன்னும் நிறைய பணிகள் நிலுவையில் உள்ளது. சாலைப் பணிகளை முடிக்கக்கூடிய இலக்கு தேதி மட்டும் மாறுகிறதே தவிர, பணிகள் முடிந்தபாடில்லை. 18 மாதங்களில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் 36 மாதங்களை கடந்தும் நடைபெற்று வருகிறது.

    பாவூர்சத்திரம் மற்றும் ராமசந்திரப்பட்டணம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. விபத்துகளை தடுக்க அதிகாரிகளின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. ஒன் டு ஒன் பஸ்கள் அசுர வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. சாலை பாதுகாப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுத்து சாலை விபத்துகளை தடுக்காவிட்டால் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து நீதிமன்றம் வரை சென்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முறையிடுவோம். சாலை பாதுகாப்பு குறித்து போதுமான நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    உடனே மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், அங்கு அமர்ந்திருந்த அதிகாரிகளை பார்த்து ஆலங்குளத்தில் இருந்து தென்காசி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். போதுமான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள திறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளில், சாலை பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதுமான எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்புகள் அமைத்தல், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.

    Next Story
    ×