என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் மாயமான 7-ம் வகுப்பு மாணவன் குளத்தில் பிணமாக மீட்பு
    X

    ஈரோட்டில் மாயமான 7-ம் வகுப்பு மாணவன் குளத்தில் பிணமாக மீட்பு

    • ஈரோடு வில்லரசம்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் முருகேசன்.
    • ஒரு குளத்தின் அருகே ஒரு மாணவனின் பள்ளி சீருடை இருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹேமச்சந்திரன் (12). இவர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவர் ஹேமச்சந்திரன் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ஹேமச்சந்திரனை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

    பின்னர் ஹேமச்சந்திரன் படிக்கும் பள்ளிக்கு சென்றும் விசாரித்தனர். அப்போது ஹேமச்சந்திரன் மாலை பள்ளி முடிந்ததும் கிளம்பி சென்றது தெரியவந்தது.

    ஆனால் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் ஹேமச்சந்திரன் மாயமானதாக வழக்கு பதிவு செய்து அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கருவில் பாறை வலசு என்ற பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே ஒரு மாணவனின் பள்ளி சீருடை இருந்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி தேடினர். நள்ளிரவில் ஒரு மணி அளவில் குளத்தில் இருந்து ஒரு மாணவர் உடலை மீட்டனர். மேலும் சந்தேகத்தின் பெயரில் மாயமான மாணவர் ஹேமச்சந்திரனின் பெற்றோரை போலீசார் வரவழைத்துக் காட்டினர். அப்போது அவர்கள் பிணமாக மீட்கப்பட்டது தங்களது மகன் ஹேமச்சந்திரன் தான் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர் ஹேமச்சந்திரன் படித்த பள்ளி மாணிக்கம்பாளையத்தில் உள்ளது. அங்கிருந்து அவர் பிணமாக கிடந்த கருவில்பாறை வலசு குளம் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அப்படி இருக்கையில் மாணவர் எப்படி இங்கு வந்தார்? மேலும் இவர் தனியாக வந்தாரா? அல்லது நண்பர்களுடன் வந்தாரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒருவேளை குளிக்கும் போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து இருந்தால் உடன் வந்தவர்கள் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மாயமான மாணவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×