என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பற்களை பிடுங்கிய விவகாரம்- அம்பை போலீஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. காட்சிகள் மாயம்?
    X

    பற்களை பிடுங்கிய விவகாரம்- அம்பை போலீஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. காட்சிகள் மாயம்?

    • அம்பை உட்கோட்ட போலீஸ் சரகத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் கடந்த மாதம் 10, 11 மற்றும் 12-ந்தேதிகளில் சி.சி.டி.வி. கேமராவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீடியோ காட்சிகள் பதிவாகவில்லை என கூறியதாக தெரிகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்ட போலீஸ் சரகத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சேரன்மகா தேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். சப்-கலெக்டர் அலுவலகத்தில். பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மேலும் கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப், தலைமை காவலர் மற்றும் 2 போலீசார் ஆஜராகி போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலமிடம் ஒப்படைத்தனர். இந்த விசாரணை வருகிற 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த சம்பவத்தில் நெல்லை மாவட்ட போலீசார் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் தனிப்பிரிவு காவலர்கள் ராஜ்குமார், போகன் ஆயுதப்படைக்கும், நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி, அம்பை சரக உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    மேலும் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், அம்பை சரக தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சக்திநடராஜன், தனிப்பிரிவு தலைமை காவலர் சந்தானகுமார், கூடுதல் தனிப்பிரிவு காவலர் மணிகண்டன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

    இந்நிலையில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், அம்பை போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்தார். அவர் அம்பை போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தபோது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கேட்டார். அதற்கு அங்குள்ள போலீசார் கடந்த மாதம் 10, 11 மற்றும் 12-ந்தேதிகளில் சி.சி.டி.வி. கேமராவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீடியோ காட்சிகள் பதிவாகவில்லை என கூறியதாக தெரிகிறது.

    கடந்த மாதம் 10-ந்தேதி தான் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று சி.சி.டி.வி. காட்சிகள் எதனால் பதிவாகவில்லை என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×