என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது குடித்த வாலிபர் மூச்சு திணறி பலி
- புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் பலியான சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 23). இவர், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டுக்கு நேற்று மாலையில் புத்தாண்டை கொண்டாட நண்பர்கள் 9 பேருடன் வந்தார். அங்கு அவரும் மற்றும் நண்பர்கள் சேர்ந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர். நள்ளிரவில் கொண்டாடுவதற்காக அறையில் அசைவ உணவுகள், மது பாட்டில்கள் வாங்கி வைத்திருந்தனர்.
தொடர்ந்து நள்ளிரவில் அவர்கள் அனைவரும் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாட தொடங்கினர். அப்போது மது விருந்து நடைபெற்றது. அப்போது சந்தோஷ் மது குடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அசைவ உணவுகள் சாப்பிட்டனர். அப்போது சந்தோஷ் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனே அவரை நண்பர்கள் ஏற்காட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விசாரணையில், சந்தோஷ் நேற்று முதல் முறையாக மது குடித்த போது, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் இறந்தது தெரியவந்தது. இறந்த சந்தோஷூக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் பலியான சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






