search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
    X
    கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வால்வு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

    பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    • பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
    • தண்ணீரின் வேகம் குறைந்து அருகே உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதில் கீழ்பவானி வாய்க்காலில் சத்தியமங்கலம் அடுத்த தங்க நகரம் என்ற பகுதிக்கு கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. கீழ்பவானி வாய்க்காலில் இருந்து இந்த கிளை வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தங்க நகரம் என்ற இடத்தில் உள்ள கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்லும் அடிப்பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வேகமாக சென்றது. மேலும் வாய்க்காலின் மேல் பகுதியில் பெரிய அளவிலான குழி ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அந்த பகுதி பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்க நகரம் பகுதியில் கீழ்வாய்க்கால் பகுதியில் அதிகளவில் குவிந்தனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மேலும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பணியாளர்கள் மூலம் குழி மேலும் பெரிதாகி உடைப்பு ஏற்படாமல் இருக்க முதல் கட்டமாக கிளை வாய்க்கால் அடைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதனால் தண்ணீரின் வேகம் குறைந்து அருகே உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

    மேலும் இது குறித்து தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறை நீர் வளப்பிரிவு பொறியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து உடைப்பை அடைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இதைதொடர்ந்து மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு தண்ணீர் மேலும் கசியாத வகையில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் முழுமையாக நின்றதும் குழியை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் குழியை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்த வால்வு சரிசெய்யும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×