search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தாக்கினாரா?- விருதுநகர் பெண் விளக்கம்
    X

    மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தாக்கினாரா?- விருதுநகர் பெண் விளக்கம்

    • நிகழ்ச்சி முடிந்த பின் கலாவதி என்ற பெண் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை சந்தித்து தனது தாயார் சகுந்தாவிற்கு முதியோர் உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
    • மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில் விருதுநகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை, அவர் வழங்கிய மனுவால் தலையில் தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 9-ந் தேதி நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்த பின் கலாவதி (வயது 55) என்ற பெண் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை சந்தித்து தனது தாயார் சகுந்தாவிற்கு முதியோர் உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    அப்போது கலாவதி கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று கூறினார். உடனே அமைச்சர் அந்த பெண்ணின் தலையை லேசாக தட்டி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்த செயல் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கலாவதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 20 வருடங்களுக்கு மேலாக நன்கு அறிமுகமானவர். தொகுதியில் எந்த குறைகள் இருந்தாலும் அவரிடம் நிவர்த்தி செய்யுமாறு கேட்போம். அந்த உரிமையில் தான் அன்று ஆடு வழங்கும் நிகழ்ச்சியில் மனு கொடுத்து எனது தாயாருக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்க ஆவண செய்யுமாறு கேட்டேன். அப்போது அமைச்சர் செல்லமாக தலையில் தட்டி தொகுதி மக்களாகிய உங்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறேன் என தெரிவித்தாக கூறினார்.

    இதற்கிடையில் கலாவதியின் தாயார் சகுந்தாவிற்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×