என் மலர்
உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் லாரி-ஆம்னி பஸ் மோதல்: 2 பேர் பலி
- பஸ்சினை திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டி வந்தார்.
- விபத்தில் 28-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை:
சென்னையில் இருந்து முப்பதுக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டி ருந்தது. பஸ்சினை திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டி வந்தார்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து தனியார் பால் பண்ணை அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை ஏற்றுக்கொண்டு முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அந்தோனிதாசன் (வயது 58), கன்னியக்குமரி விளவங்கோடு கமலாபாய் (64) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 28-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதே போல விபத்தில் சிக்கிய லாரியில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உயிர் இழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
இந்த விபத்தால் 2 மணி நேரத்திற்கு மேலாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு உளுந்தூர்பேட்டை நகராட்சி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.






