என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருநங்கைகள் மோதிக் கொண்ட காட்சி.
அரக்கோணத்தில் திருநங்கைகள் திடீர் மோதல்- போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி
- திருநங்கைகள் அளித்த புகார் மனு மீது நேற்று பிற்பகல் வரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மேலும் திருநங்கை ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம்:
அரக்கோணம் தாலுகா போலீசாரிடம் அரக்கோணம் பகுதி திருநங்கைகள் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் நேற்று பிற்பகல் வரை இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திருநங்கை ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருநங்கைகள் தங்களுடைய பாணியில் தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போயினர். செய்வதறியாமல் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டனர். இதை கண்ட பொதுமக்கள் திருநங்கைகளின் செயல்பாடுகளை கண்டித்தனர்.
இதனால் அரக்கோணம்- திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடைபெற்று முடிவதற்குள் திருவள்ளூர் மாவட்ட திருநங்கைகள் அரக்கோணத்தை சேர்ந்த திருநங்கைகள் மீது புகார் அளித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேசன் இரு குழுவையும் தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்தது.






