என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலசப்பாக்கம் அருகே அண்ணன்-தம்பி உட்பட 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி
    X

    கலசப்பாக்கம் அருகே அண்ணன்-தம்பி உட்பட 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

    • அஜித் மட்டும் தண்ணீரில் மிதந்தபடி கூச்சல் போட்டான்.அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர் அஜித்தை மீட்டார்.
    • மாணவர்கள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் தேடத்தொடங்கினர். அப்போதுதான் அந்த 3 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது.

    கலசப்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன்கள் அருள் (வயது 10), அஜித் (9), சந்திப் (7). அருள் 5-ம் வகுப்பும், அஜித் 4-ம் வகுப்பும், சந்திப் 2-ம் வகுப்பும் லாடவரம் அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணனின் ஒரே மகன் ஜீவன் குமார் (8). 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை 4 மாணவர்களும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தனர். பின்னர் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து அதேப் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர்.

    அப்போது 4 பேரில் ஒரு மாணவன் பள்ளத்தில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அவனை காப்பாற்ற முயன்றபோது ஒருவர்பின் 'ஒருவராக 4 பேரும் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளனர். அவர்களில் அஜித் மட்டும் தண்ணீரில் மிதந்தபடி கூச்சல் போட்டான்.அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர் அஜித்தை மீட்டார்.

    மீட்கப்பட்ட அஜித் பயந்து உடனடியாக வீட்டிற்கு சென்று விட்டான். மற்றவர்கள் தண்ணீரில் மூழ்கியது தெரியாததால் அஜித்தை மீட்டவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இரவு 7 மணிக்கு மேல் ஆகியும் மற்ற மாணவர்கள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் தேடத்தொடங்கினர். அப்போதுதான் அந்த 3 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது.

    இது குறித்து போளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய அருள், அவனது தம்பி சந்திப் மற்றும் ஜீவன் குமார் ஆகிய 3 பேரையும் பிணமாக மீட்டனர்.

    இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த 3 மாணவர்களின் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×