என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாண்டை கொண்டாட கொடைக்கானல்-தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    புத்தாண்டை கொண்டாட கொடைக்கானல்-தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • கொடைக்கானலில் பகல் பொழுதில் இதமான வெயிலும் இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலம் மற்றும் ஆப் சீசனில் அதிக அளவு பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட இஸ்ரேல் நாட்டில் இருந்து பயணிகள் அதிக அளவில் வட்டக்கானல் பகுதிக்கு வருகை தருகின்றனர்.

    தற்போது கொடைக்கானலில் பகல் பொழுதில் இதமான வெயிலும் இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளை புத்தாண்டு பிறப்பை வரவேற்க ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அலங்கார தோரணங்கள், வண்ண விளக்குகள் ஒளிர விடப்பட்டுள்ளன. முக்கிய சுற்றுலா இடங்களான வெள்ளி நீர் வீழ்ச்சி, ரோஜா தோட்டம், பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, தூண்பாறை, மோயர் பாயிண்ட், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களை கண்டு ரசித்தனர்.

    மேலும் பிரையண்ட் பூங்காவில் குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் வாலிபால், இறகுபந்து உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தனர். நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.

    மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து உற்சாகமடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கேரள மாநிலம் தேக்கடி, குமுளி, மூணாறு, மறையூர் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக தேக்கடியில் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. உற்சாகமாக படகு சவாரி செய்து அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளை கண்டு ரசித்தனர். குளிர் அதிகமாக இருந்த போது அதிகளவில் வந்திருந்தனர்.

    ஏற்கனவே தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் இன்று இரவு மேலும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×