என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- கடும் போக்குவரத்து நெரிசல்

    • புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • ஒரே நேரத்தில் அதிகளவு சுற்றுலா வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இஸ்ரேல் நாட்டிலிருந்து சுற்றுலா பயணிகள் வட்டக்கானலுக்கு வந்தனர்.

    கடந்த ஒரு வாரமாக இங்கு தங்கிய அவர்கள் சிறப்பு பிரார்த்தணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் ஓட்டல்கள், மற்றும் தங்கும் விடுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சுற்றுலா பயணிகள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒன்றுகூடி கொண்டாட்டங்களில் ஈடுபட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இன்று புத்தாண்டையொட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்ததால் 6 டிகிரி செல்சியஸ் குளிரிலும் மோயர்பாயிண்ட், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன்பாரஸ்ட், கோக்கர்ஸ்வாக், பிரையண்ட்பூங்கா, நட்சத்திர ஏரி, உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    ஒரே நேரத்தில் அதிகளவு சுற்றுலா வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். தொடர்ந்து வாகனங்கள் அதிகரித்ததால் அவர்கள் சோர்வடைந்து காணப்பட்டனர்.

    எனவே வருங்காலங்களில் பண்டிகை கொண்டாட்டங்களின்போது கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×