என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் அருகே டோல்கேட் ஊழியர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை
- குன்னத்தை அடுத்த சு.ஆடுதுறை கிராமம் மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கோபால்.
- முதல் கட்ட விசாரணையில் கோபாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததோடு, பலரிடம் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தை அடுத்த சு.ஆடுதுறை கிராமம் மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கோபால் (வயது 42). இவருக்கு திருமணமாகி முனியம்மாள் (40) என்ற மனைவியும், கோகுல் (19) என்ற மகனும், பவித்ரா (14) என்ற மகளும் உள்ளனர்.
கோபால் திருமாந்துறையில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியில் சாலை ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். அந்த சுங்கச்சாவடி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் விபத்து மற்றும் விதிமீறும் வாகனங்கள், பழுதாகும் வாகனங்களை இழுத்து வரும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை எழுந்த அவர் காலை 5.45 மணிக்கு தனது மனைவியிடம் கூறி விட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றார். வழக்கமாக பணியிடத்திற்கு சென்றவுடன் அவரது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இன்று நீண்ட நேரமாகியும் முனியம்மாளுக்கு கோபாலிடம் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் முனியம்மாள் பதட்டம் அடைந்தார்.
இதற்கிடையே சுங்கச்சாவடிக்கு செல்லும் வழியில் உள்ள சு.ஆடுதுறை வெள்ளாற்றங்கரை அருகிலுள்ள பாழடைந்த தகரக்கொட்டகையில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஒருவரின் உடல் எரிந்து கொண்டிருந்தது. அதற்கு சற்று தூரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் எரிந்த நபரின் உடல் கரிக்கட்டையானது. பின்னர் அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் எரிந்து கிடந்த நபர் டோல்கேட் ஊழியரான கோபால் என்பது தெரியவந்தது.
மனைவியிடம் கூறிவிட்டு வேலைக்கு சென்ற கோபால் எப்படி இறந்தார், அவர் தனக்கு தானே உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று எரித்து கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
மேலும் முதல் கட்ட விசாரணையில் கோபாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததோடு, பலரிடம் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
மேலும் இன்று காலை பணிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு பங்க்கில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி சென்ற அவர் மறைவான இடத்திற்கு சென்று தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






