என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே ஜாமீனில் விடுவிக்க ரவுடியிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
- குள்ளஞ்சாவடி அருகே சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்.
- ஸ்ரீகாந்தை ஜாமீனில் விடுவிக்க இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் 10,000 ரூபாய் லஞ்சம் தருமாறு பேரம் பேசியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், (வயது35) இவர் மீது குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குள்ளஞ்சாவடி போலீசார் அடிக்கடி கைது செய்வது வழக்கம். கடந்த 5 நாட்களுக்கு முன்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து கடலூர் அரசு மருத்துவமனையில் உடல் தகுதிசான்றிதழ் பெற பரிசோதனைக்காக அழைத்து வந்தனர்.
உடல்நிலை சரியில்லாததால் உடல் தகுதி சான்றிதழ்வழங்க டாக்டர்கள் மறுத்து விட்டனர்.
இதன் காரணமாக ஸ்ரீகாந்தை ஜாமீனில் விடுவிக்க இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் 10,000 ரூபாய் லஞ்சம் தருமாறு பேரம் பேசியுள்ளார். ஆனால், ஸ்ரீகாந்த் 5,000 ரூபாய் மட்டுமே தருவதாக ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த், கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி போலீஸ் நிலையத்திற்கும் இன்ஸ்பெக்டர் குடியிருப்பிற்கும் இடையே நின்றிருந்த இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஸ்ரீகாந்த் கொடுத்தார்.
அங்கு மறைந்திருந்த ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், அன்பழகன், சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார், இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரை அதிரடியாக கைது செய்தனர்.






