என் மலர்
உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு
- ராமலிங்கம் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளார்.
- ரெயில்வே துறை ஊழியர் வீட்டில் இரும்பு பெட்டியில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் பணம் ஆகியவை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான இவர் எஸ்.ஒகையூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் ஒரு அறையில் ராமலிங்கமும் மற்றொரு அறையில் அவரது மாமியார் செல்லம்மாள் என்பவரும் படுத்து உறங்கினர். ராமலிங்கம் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளார்.
காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த இரும்பு பெட்டியை காணவில்லை. அக்கம், பக்கம் தேடிப் பார்த்தபோது சுமார் 200 மீட்டர் தூரத்தில் ரெயில்வே பாதை அருகே இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பத்திரங்கள், பாண்டுகள் ஆகியவைகள் சிதறி கிடந்தது. மேலும், அதிலிருந்து சுமார் 18 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், செல்வராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையில் ராமலிங்கம் மகள் தேவி கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் தந்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் என நகைகளை வீட்டில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இரும்பு பெட்டியை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவில் கை வைக்காமல் சென்றனர். இதனால் பீரோவில் இருந்த நகை பாதுகாப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற ரெயில்வே துறை ஊழியர் வீட்டில் இரும்பு பெட்டியில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் பணம் ஆகியவை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






