என் மலர்
உள்ளூர் செய்திகள்

தெங்குமரஹடா கிராம மக்களை வெளியேற்றி வேறு இடத்தில் மறுகுடியமர்வு செய்ய உத்தரவு
- தெங்குமரஹடா கிராமத்தினரை இடமாற்றம் செய்ய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நிதி ஒதுக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை தற்காலிகமாக வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்ட எல்லையில் தெங்குமரஹடா கிராமம் உள்ளது. மாயாற்றின் கரையில் அடர்ந்த தீவாக அமைந்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை கடந்து இக்கிராமம் செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக பவானிசாகர் வந்து அங்கிருந்து 25 கி.மீ. அடர்வனத்தில் சென்று தெங்குமரஹடா அடைய வேண்டும். கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என 2 அரசு பஸ்கள் இக்கிராமத்துக்கு இயக்கப்படுகிறது. மாயாற்றின் கரையில் பஸ் நிறுத்தப்பட்டு பரிசிலில் ஆற்றை கடந்து இக்கிராமம் செல்ல வேண்டும்.
தெங்குமரஹடா கூட்டுறவு சங்கத்துக்கு 1948-ம் ஆண்டு 100 ஏக்கர் நிலம் வழங்கி அங்குள்ளவர்கள் விவசாயம் செய்தனர். பின் வனத்துறை நிலம் 500 ஏக்கர் குத்தகைக்கு வழங்கியது. இப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, கரடி, மான் உட்பட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் இங்கு 33 புலிகள் இருப்பதாக அறிவித்தனர்.
மனித, விலங்குகள் மோதல் கருதி, இம்மக்களை வனத்தில் இருந்து வெளியேற்றி வேறு பகுதியில் குடியேற்ற அரசு முடிவு செய்தது. இதற்காக நீதிமன்ற உத்தரவை, வனத்துறை பெற்றது. கடந்த 2011-ம் ஆண்டு கோவை மண்டல வனப்பாதுகாவலர் இம்மக்களுக்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறுவதாக பரிந்துரைத்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சப்-கலெக்டர் ஆய்வுப்படி 497 குடும்பத்தினர் அங்குள்ளதாகவும் அவர்களை வெளியேற்ற கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கலந்தாய்வு கூட்டமும் நடத்தியது. இதில் ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள், சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் சரணாலய கள இயக்குனர்கள் பங்கேற்றனர்.
போதிய இழப்பீடு வழங்கினால் கிராமத்தை விட்டு வெளியேறுவதாக குறிப்பிட்ட மக்கள் தெரிவித்தனர். இதன்படி இக்கிராமத்தில் வசிக்கும் 497 குடும்பத்துக்கும் தலா ரூ.15 லட்சம் என ரூ.74.55 கோடி ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்தது. சில மாதங்களாக இப்பிரச்சனை கிடப்பில் போனது.
இந்நிலையில் தெங்குமரஹடா கிராமத்தினரை இடமாற்றம் செய்ய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நிதி ஒதுக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிதியை கிராம மக்களுக்கு 2 மாதங்களில் வழங்கி அடுத்த ஒரு மாதத்துக்குள் அவர்களை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து அக்டோபர் 10-ந்தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டாக தீவிரம் காட்டிய பிரச்சனையில் காலக்கெடு நிர்ணயித்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அக்கிராம கமிட்டியினர் கூறியதாவது:-
எங்கள் மூதாதையர் காலம் முதல் இங்கு வசித்து விவசாயம் செய்கிறோம். 3, 4-வது தலைமுறையாக உள்ளோம். இங்கு எங்களுக்கு பட்டா உட்பட எந்த வசதியும் இல்லை. இருந்தும் போதிய இழப்பீடு வழங்கி ஈரோடு மாவட்ட பவானிசாகர் அணை பகுதியில் ஒரு குடும்பத்துக்கு குறைந்த பட்சம் 5 சென்ட் நிலம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும். அப்பகுதியை தனி பஞ்சாயத்தாக அறிவித்து விவசாயம் செய்ய வாய்ப்பு தர வேண்டும்.
அதேநேரம் தெங்கு மரஹடா கிராமம் உள்ள பகுதியில் கல்லாம் பாளையம், கல்லாம் பாளையம் கீழூர், அல்லிமாயார், புதுக்காடு என 4 கிராமங்களும், அங்கு பல 100 பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்களது நிலை என்ன என்பதை அரசும், வனத்துறையும் தெளிவுபடுத்த வேண்டும்.
இங்கு வசிப்போரில் பலருக்கு இக்கிராமத்தில் இருந்து வெளியேற விருப்பமும் இல்லை. அவர்களது கருத்தையும் அரசு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கூறும்போது,
இப்பகுதியில் வனவளத்தை அதிகரிக்க இக்கிராமத்தை அப்புறப்படுத்த வேண்டி உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களுக்கு இழப்பீடும், மாற்று இடமும் வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள இக்கிராமத்தை அகற்றி ஈரோடு மாவட்டத்தில் மறுகுடியமர்வு செய்வதில் நிர்வாக ரீதியாக பிரச்சனை உள்ளது.
இருப்பினும் பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை தற்காலிகமாக இவர்களுக்கு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விடத்தை ஒதுக்குவது பற்றி மாவட்ட நிர்வாகமும், அரசும் விரைவில் அறிவிக்கும் என்றனர்.






