என் மலர்
உள்ளூர் செய்திகள்

புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.21 கோடியில் திட்டம்
- புழல் ஏரியில் வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- கழிவுநீர் திருமுல்லைவாயலில் இருந்து சூரப்பட்டு ஏரியில் கலப்பதாகவும் பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.
செங்குன்றம்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதில் 3,300 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 2908 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
புழல் ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால் மாசு அடைந்து வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
இதையடுத்து புழல் ஏரியில் வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஓட்டல்கள், கடைகளில் இருந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டு கழிவுநீர் கொட்டப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் வீடுகள், திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் இருந்து வெளியேறும் தண்ணீரை குழாயில் இணைத்து வெளியேற்றுவதற்கு மெட்ரோ வாட்டர் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதனால் ஏரிக்கு கழிவுநீர் வெளியேற்றப்படுவது தடுக்கப்படும். இந்த திட்டப்பணி பருவமழை முடிந்தவுடன் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு பின்னர் ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்பத்தூர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தொடர்ந்து அருகில் உள்ள ஏரியில் கலப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
மேலும் கழிவுநீர் திருமுல்லைவாயலில் இருந்து சூரப்பட்டு ஏரியில் கலப்பதாகவும் பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.
தனியார் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் 57 தெருக்களில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலப்பது தெரிய வந்துள்ளது. எனினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்படி அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பம்ப்பிங் நிலையங்கள் மற்றும் பிற பணிகளுக்கு ரூ.21 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






