என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழவேற்காட்டில் கடல் சீற்றம்- குளிர்ந்த காற்று வேகமாக வீசுகிறது
- வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
- மீன்பிடி படகுகளை கரையில் கட்டி வைத்து வலைகளை பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.
பொன்னேரி:
வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் பலத்த மழைபெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து எண்ணூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
எனினும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் மழை இல்லை. ஆனால் வழக்கத்தை விட குளிர் அதிக அளவில் நிலவி வருகிறது.
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம், காரனோடை, காட்டூர் தச்சூர் உள்ளிட்ட பகுதியில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை பழவேற்காடு கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்தகாற்றும் வீசுகிறது.
இதனால் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமமக்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. மீன்பிடி படகுகளை கரையில் கட்டி வைத்து வலைகளை பாதுகாப்பாக வைத்து உள்ளனர். குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். வயதானவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.
இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் கூறும்போது, கடல்பகுதியில் தற்போது குளிர்ந்த காற்று வேகமாக வீசுகிறது. வானிலை ஆய்வு மையத்தின் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.






