என் மலர்
உள்ளூர் செய்திகள்

பு.புளியம்பட்டி பா.ஜனதா பிரமுகரின் கார் எரிப்பு வழக்கில் கைதானவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
- பா.ஜ.க. பிரமுகர் சிவசேகர் என்பவருக்கு சொந்தமான காரை மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
- புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, எஸ் ஆர். டி. தியேட்டர் பின்புறம் 2 -வது வீதியில் பா.ஜ.க. பிரமுகர் சிவசேகர் என்பவருக்கு சொந்தமான காரை மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
இது தொடர்பாக புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடி மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி.க்கள் பாலமுருகன், ஜானகிராமன் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் சேகர், நீலகண்டன், சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் அன்பரசு, வடிவேல்குமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய கமருதீன். அப்துல்வகாப், நியமத்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கமருதீன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய முகமது பஷீர், அமானுல்லா ஆகியோரையும் புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் அமானுல்லா மீது தேசிய பாதுகாப்பு சட்ட திருத்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் அமானுல்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைது செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து அமானுல்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






