என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாம்பரத்தில் போலீசாரை கண்டித்து கோர்ட்டு முன்பு வக்கீல்கள் தர்ணா போராட்டம்
- வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து அனுப்பிதாக கூறப்படுகிறது.
- வக்கீல்கள் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவர் சினிமா பார்த்து விட்டு நள்ளிரவு குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து அனுப்பிதாக கூறப்படுகிறது.
இதுபோல் சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவில் வழக்குகளில் தலையிடுவதாகவும், வக்கீல்களை தரக்குறைவாக பேசுவதாகவும் வக்கீல்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் போலீசாரின் நடவடிக்கைகளை கண்டித்து தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகம் முன்பு இன்று காலை வக்கீல்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் சங்க தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். சுமார் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு பணியை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் கோர்ட்டு வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் குதித்தனர். அப்போது போலீசருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது வக்கீல்கள் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் கூட்டத்தின் உள்ளே சென்று உதவி கமிஷனரை பத்திரமாக அழைத்து வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.






