search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளி மாநில ஆடர்கள் வருவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் கோடை வியாபாரம் விறுவிறுப்பு
    X

    வெளி மாநில ஆடர்கள் வருவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் கோடை வியாபாரம் விறுவிறுப்பு

    • கோடை காலம் தொடங்கி உள்ளதால் காட்டன் துணிகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
    • சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது. அதேப்போல் தினசரி கடைகளும் வாரச்சந்தை கடைகளும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ஜவுளி சந்தை உலக புகழ்பெற்றது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை மொத்த விலைக்கு வாங்கி செல்வார்கள். இதனால் சந்தை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற இடங்களை விட இந்த துணிகள் மலிவாக கிடைப்பதால் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் காட்டன் துணிகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காட்டன் வேஷ்டி, சட்டைகள், சேலைகள், துண்டுகள் விற்பனை அதிகரித்துள்ளது.

    இன்று கூடிய சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்தனர். இதுபோக வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான காட்டன் துணி ஆர்டர்கள் வந்துள்ளது.

    இதனால் இன்று மொத்த வியாபாரம் 30 சதவீதம் நடைபெற்றது. இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று காட்டன் துண்டுகள் அதிக அளவில் விற்பனையாகின. இதேபோல் சில்லரை விற்பனையும் இன்று சுறுசுறுப்பாக நடைபெற்றது. இன்று 40 சதவீதம் சில்லரை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இனி வரக்கூடிய நாட்களில் வியாபாரம் மேலும் சூடு பிடிக்கும் என ஜவுளி வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×