என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சத்தியமங்கலம்-பு.புளியம்பட்டியில் பெரும்பாலான கடைகள் அடைப்பு
    X

    தி.மு.க எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சத்தியமங்கலம்-பு.புளியம்பட்டியில் பெரும்பாலான கடைகள் அடைப்பு

    • ஆ. ராசாவின் பேச்சை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க.வினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
    • சத்தியமங்கலத்தில் மணிக்கூண்டு, வடக்குப்பேட்டை, பஸ் நிலையம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    சத்தியமங்கலம:

    தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆ. ராசாவின் பேச்சை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க.வினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஆ.ராசா எம்.பி.யின் பேச்சை கண்டித்து சத்தியமங்கலம், பவானிசாகர், பு.புளியம்பட்டியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் வழக்கு போல் கடைகள் திறக்கப்படும் என தி.மு.க. சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்பாக 2 தரப்பினரும் மாறி மாறி நோட்டீஸ் வழங்கினர். இதனால் கடைகள் திறக்கப்படுமா? என குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.

    இந்நிலையில் இன்று சத்தியமங்கலம், பவானி சாகர், பு.புளியம்பட்டி பகுதிகளில் பெரும்பான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக டீக்கடைகள், பேக்கரி கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை அடைக்கப்பட்டு இருந்தன.

    சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. சத்தியமங்கலம் பஸ் நிலையப் பகுதிகளில் இன்று காலை கடைகள் திறக்கப்பட்டதும் இந்து முன்னணி நிர்வாகிகள் கடைகளை அடக்க சொல்லி வற்புறுத்தினர்.

    இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த கோட்டு வீராம்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை டீக்கடை திறக்கப்பட்டதும் இந்து முன்னணி நிர்வாகிகள் வந்து கடையை அடைக்க சொல்லி வற்புறுத்தினர்.

    இதில் சிலர் டீக்கடை கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    சத்தியமங்கலத்தில் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்திய இந்து முன்னணி மாவட்ட தலைவர் சக்திவேல் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதேப்போல் சத்தியமங்கலம் நகர தி.மு.க. சேர்மன் ஜானகி ராமசாமியிடம் இந்து முன்னணியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்திய மங்கலத்தில் முக்கியமான பகுதிகள் கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சத்தியமங்கலத்தில் மணிக்கூண்டு, வடக்குப்பேட்டை, பஸ் நிலையம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதேப்போல் பவானிசாகர் பகுதிகளிலும் 50 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில டீக்கடைகள், பேக்கரி கடைகள், ஹோட்டல்கள் திறக்கப்பட்டு இருந்தன. இருந்தாலும் மக்கள் அச்சம் காரணமாக கடைகளில் வரவில்லை. கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் பு.புளியம்பட்டியில் இன்று 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் போலீஸ் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புளியம்பட்டியில் இன்று காலை ஒரு டீக்கடை திறந்ததும் இந்து முன்னணி நிர்வாகிகள் கடையை அடைக்க வேண்டும் என்று சொல்லி வற்புறுத்தினர்.

    அதே நேரத்தில் தி.மு.க.வினர் கடையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து புளியம்பட்டி போலீசார் அப்பகுதிக்கு வந்து இருதரப்பு இடையே சமாதானம் செய்து வைத்தனர்.

    இந்து முன்னணி நிர்வாகிகள், பி.ஜே.பி.யை சேர்ந்தவர்கள் என 8 நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×