search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 10 போலி கிளீனிக்-மருந்தகங்களுக்கு சீல்
    X

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 10 போலி கிளீனிக்-மருந்தகங்களுக்கு சீல்

    • திருப்பூர் மாவட்டம் தொழில்நகரமாக இருப்பதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
    • முறைகேடாக செயல்படும் கிளீனிக் மற்றும் மருந்தகங்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தொழில்நகரமாக இருப்பதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி, வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் கிளீனிக்குகளை பலர் தொடங்கி வருகிறார்கள்.

    இந்த கிளீனிக் மற்றும் மருந்தகங்கள் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பலரும் அமைத்து வருகிறார்கள். அரசு வழிமுறைகளின் படி சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் தொழிலாளர்கள் அதிகளவு இருப்பதால், அவர்களின் அறியாமையை பயன்படுத்தி சிலர் போலியாக மருந்தகங்கள் மற்றும் கிளீனிக்குகள் போன்றவற்றை தொடங்குகிறார்கள். இதில் சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள் போலியாக இருக்கிறார்கள்.

    இதனால் திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக செயல்படும் கிளீனிக் மற்றும் மருந்தகங்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வின் போது முறைகேடாக செயல்படும் கிளீனிக் மற்றும் மருந்தகங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. இதுபோல் போலி டாக்டர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே தற்போது இந்த சம்பவங்களை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலி டாக்டர்களை கைது செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்களை குறித்து வைத்து இதுபோன்று பலர் போலியாக மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறார்கள். இதற்காக உரிய படிப்பு தகுதி இல்லாதவர்கள் டாக்டர்களாக செயல்படுகிறார்கள். மேலும், மருந்தகங்கள், கிளீனிக்குகள் போன்றவற்றை முறைகேடாக தொடங்கி வருகிறார்கள். இதனை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 3 மாதத்தில் மட்டும் போலியாக செயல்பட்ட 5 மருந்தகங்கள் மற்றும் 5 கிளீனிக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. போலி டாக்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய, போலி டாக்டர் ஒழிப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் 13 பேர் உள்ளனர். இந்த கமிட்டியினர் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் திருப்பூர் மாவட்டம் போலி மருந்தகம், போலி கிளினிக் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். போலி டாக்டர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×