என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்தியமங்கலம்- அந்தியூரில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம்: சோதனை சாவடிகள் தீவிர கண்காணிப்பு
- பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
- சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சத்திமங்கலம்:
தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மாண்டியாவில் கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கர்நாடகா நீர் பாதுகாப்பு குழு அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி தமிழக அரசு கர்நாடகா மாநிலத்துக்கு பஸ்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. அதே போல் சரக்கு வாகனங்களும் கர்நாடக மாநிலத்துக்கு செல்ல வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூர், சாம்ராஜ் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பண்ணாரி, தாளவாடி வழியாக தினமும் 9 தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழியாக தினமும் சரக்கு வாகனங்கள், கார், வேன் என பல வாகனங்களும் சென்று வருகிறது.
ஆனால் பெங்களூருவில் முழு அடைப்பு காரணமாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு செல்லக்கூடிய தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பஸ்கள் சத்தியமங்கலம் அரசு பணி மனையிலேயே நிறுத்தப்பட்டது. இது பற்றி தகவல் அறியாமல் பொதுமக்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையத்துக்கு வந்தனர். ஆனால் நீண்ட நேரம் பஸ்கள் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.
அதே போல் கர்நாடாகவுக்கு சென்ற சரக்கு வாகனங்களும் தமிழக எல்லையான பண்ணாரி, புளிஞ்சூர் சோதனை சாவடிகள் வரை மட்டும் சென்றன. அந்த வாகனங்கள் ஆங்காங்கே ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டன. மேலும் பல சரக்கு லாரிகள் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தப்பட்டன. லாரி ஓட்டுனர்கள் ஆங்காங்கே சமையல் செய்தும் சாப்பிட்டனர். ஆனால் மருந்து உள்பட அத்தியவசிய பொருட்கள் எடுத்து வந்த வாகனங்கள் மட்டுமே சென்றன.
இதே போல் அந்தியூர் மற்றும் பர்கூர் வழியாக வரட்டுபள்ளம் சோதனை சாவடி, பர்கூர் போலீஸ் நிலைய சோதனை சாவடி, கர்கே கண்டி அருகே உள்ள சோதனை சாவடிகள் உள்ளன. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கர்நாடகா மாநிலம் மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளுக்கு சென்று வருகிறது.
மேலும் அந்தியூர் இருந்து மைசூர் உள்பட பல பகுதிகளுக்கு தமிழகத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் சென்று வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக அந்தியூர், பர்கூர் வழியாக மைசூர், சாம்ராஜ் நகர் செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் அனைத்து பஸ்களும் கர்நாடகாவுக்கு செல்லவில்லை.
மேலும் அந்தியூர் பகுதியில் இருந்து ஒரு சில சரக்கு வாகனங்கள் மற்றும் கார், வேன் உள்பட பல வாகனங்கள் சென்றன.
ஆனால் பர்கூர் அடுத்த கர்கேகண்டி சோதனை சாவடி வழியாக கர்நாடகாவுக்கு சென்ற வாகனங்கள் அனுமதிக்கப்பட வில்லை. அந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டன. இதனால் ரோட்டோரங்களில் சரக்கு வானங்களில் அணிவகுத்து நிற்கிறது.
ஆனால் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
மேலும் சத்தியமங்கலம், அந்தியூர் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.






