search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடூர கொலையாளி சதீசுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க முடிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கொடூர கொலையாளி சதீசுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க முடிவு

    • கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த விரைவில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.
    • அதிகாரி நியமிக்கப்பட்டவுடன் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரப்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளி கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காமலேயே உள்ளது.

    இக்கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த கொலையாளி சதீசை ரெயில்வே போலீசாரே கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பரபரப்பான மதிய வேளையில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவத்தை பயணிகள் பலரும் நேரில் பார்த்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் சாட்சிகள் வலுவாகவே உள்ளன.

    அதே நேரத்தில் ரெயில் நிலையத்தில் உள்ள கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ரெயில்வே போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த விரைவில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். இந்த அதிகாரி நியமிக்கப்பட்டவுடன் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரப்படுத்தப்பட உள்ளது.

    இந்த வழக்கை பொறுத்தவரையில் மற்ற வழக்குகளை போல் அல்லாமல் சிறப்பு கவனம் செலுத்தி விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    கொடூரமான கொலை சம்பவம் என்பதால் இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் ஓரளவுக்கு தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக உள்ளனர். இதையடுத்து கொலை வழக்கில் உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க முடிவு செய்து உள்ளனர்.

    இதையடுத்து அதற்கு தேவையான ஆவணங்களை சேகரிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். வழக்கு விசாரணையை விரைவில் முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×