என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம்
- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கும் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மற்றும் 225 ஊராட்சி செயலர்களும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்த முத்தான் (45) என்பவர் நேற்று முன்தினம் அலுவலகத்தில் பணியில் இருந்தார்.
அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தாளவாடியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ்நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் ஊராட்சி செயலர் முத்தான் பணி சுமை காரணமாக இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் இன்று பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கும் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் துணைத் தலைவர் பாஸ்கர் பாபு, மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஊராட்சி செயலர் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும், ஊழியர்களுக்கு பணி சுமையை ஏற்படுத்தக் கூடாது என்றும் பேசினர்.
மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு உடனடியாக நிதி உதவி செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் கூறினர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி. என். பாளையம், கோபி, நம்பியூர் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் இன்று பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மற்றும் 225 ஊராட்சி செயலர்களும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.






