என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.24.70 லட்சம் பறிமுதல்- பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
- ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகின்றனர்.
- ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் மதுபானங்கள், பரிசுப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது.
அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகின்றனர். இதேபோல் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் மதுபானங்கள், பரிசுப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யும் பணம் அனைத்தும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.24 லட்சத்து 70 ஆயிரத்து 870 நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோல் ஹான்ஸ், பான்பராக், கஞ்சா என இதுவரை 1,650 கிராம் மதிப்பிலான புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.18,653 ஆகும். இதுவரை 77 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.53 ஆயிரத்து 850 ஆகும்.
தொடர்ந்து நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.






