search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
    X

    தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள்.


    இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

    • மணல் திட்டு பகுதியில் தவித்தப்படி நிற்கும் இலங்கை தமிழர்களை கடலோர காவல்படை மீட்டு வருகிறது.
    • இலங்கை தமிழர்கள் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு காய்கறி, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் வாழ வழியின்றி தவித்தனர்.

    இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர் குடும்பம் குடும்பமாக அங்கிருந்து வெளியேறி அகதிகளாக தமிழகத்திற்கு வரத்தொடங்கினர். கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த வருகை, தற்போது வரை நீடித்து வருகிறது.

    இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வரக்கூடிய தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகிறார்கள். அவர்கள் படகில் ரகசியமாக வருவதால், அவர்களை அழைத்து வரக்கூடியவர்கள் தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல்திட்டுகளில் இறக்கிவிட்டு சென்று விடுகின்றனர்.

    நடுக்கடலில் மணல் திட்டு பகுதியில் தவித்தப்படி நிற்கும் இலங்கை தமிழர்களை கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை மீட்டு வருகிறது. அவ்வாறு மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர்.

    இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் உள்ள 2-வது மணல் திட்டில் இலங்கை தமிழர்கள் சிலர் நிற்பதை இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் பார்த்தனர். அவர்கள் அது குறித்து ராமேசுவரம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின்அடிப்படையில் இந்திய கடலோர காவல் படையினர் அந்த பகுதிக்கு சென்று மணல் திட்டில் தவித்தப்படி நின்ற 6 பேரை மீட்டு கப்பல் மூலம் கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் இலங்கையில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டம் தேசாலை ஓலைதிருவாய் பகுதியை சேர்ந்த அந்தோணி (வயது24), அவரது மனைவி கனுசியா (20), சசிகுமார் (47), அவரது மகன்கள் அந்தோணிராஜ் பெர்னாண்டோ, அன்டல் கனுஜன் (21), இலங்கை முத்திரைத்துறை பகுதியை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி என்பது தெரியவந்தது.

    மீட்கப்பட்ட 6 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் எதற்காக வந்தார்கள்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியில்லாததால், அங்கிருந்து தமிழகத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

    அவர்களிடம் 'கியூ' பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தனுஷ்கோடி மற்றும் ராமேசுவரத்திற்கு இதுவரை 181 இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×