என் மலர்
உள்ளூர் செய்திகள்

அவினாசியில் வாழை தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தை பிணம் மீட்பு
- வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மரியரத்தினம் சென்ற போது மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது.
- தகாத உறவின் மூலம் பிறந்ததால் குழந்தையை கொன்று தோட்டத்தில் புதைத்தனரா அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் புதைத்து சென்றனரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த பழனி கவுண்டர்தோட்டம் பகுதியில் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதனை ஆரோக்கியசாமி மற்றும் அவரது மனைவி மரியரத்தினம் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.
நேற்று அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மரியரத்தினம் சென்ற போது மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த மரியரத்தினம் இது குறித்து உடனடியாக அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்து கிடந்தது. குழந்தையின் முகம் எறும்புகளால் அரிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாய் யாரென்று தெரியவில்லை. தகாத உறவின் மூலம் பிறந்ததால் குழந்தையை கொன்று தோட்டத்தில் புதைத்தனரா அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் புதைத்து சென்றனரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






