என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு அருகே அரசு பள்ளி கட்டிட பணி திடீர் நிறுத்தம்- பொதுமக்கள் அதிர்ச்சி
- பள்ளியில் உள்ள வளாகத்தில் வகுப்பறை கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றது.
- பள்ளியில் நடைபெற்ற கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு பாதியில் நிற்கிறது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே உள்ள வல்லம் ஊராட்சியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஊராட்சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்கள் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்படிப்புக்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள செங்கல்பட்டு பகுதிக்கு சென்று வருகிறார்கள். இந்த பள்ளி அருகே மலைஈஸ்வரன் கோவில் உள்ளது. இது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.31லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து பள்ளியில் உள்ள வளாகத்தில் வகுப்பறை கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றது. பணிகள் முடியும் நிலையில் பள்ளி கட்டுமான பணியை தொல்லியல் துறை திடீரென நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தொல்லியல் துறையின் உரிய அனுமதி இல்லாமல் கட்டிட பணி நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு பாதியில் நிற்கிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டும் உரிய பதில் இல்லாததால் பள்ளி கட்டுமான பணி முடிக்கப்படாமல் காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து வல்லம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது:-
வல்லத்தில் உள்ள மலை ஈஸ்வரன் கோவிலை சுற்றி குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா உள்ளது. இதுவரை இப்பகுதி தொல்பொருள் ஆராய்ச்சிக்கு சொந்தமான இடம் என்று மலையை ஒட்டிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் போது எந்த அதிகாரிகளும் பணிகளை நிறுத்தியது இல்லை. ஆனால் இப்போது மலை அடிவாரத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி நடுநிலை பள்ளிக்கு கட்டிடம் கட்டும் போது தொல்லியல் துறையினர் அனுமதியின்றி கட்டுவதாக பணியை நிறுத்தி உள்ளனர். மாணவர்களின் படிப்பு சம்பந்தமான விஷயத்தில் அதிகாரிகள் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். எனவே பாதியில் நிற்கும் பள்ளி கட்டிட பணியை முழுவதும் முடிக்கவும், மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் கல்வித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






