என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளையில் பட்டாசு வெடித்த தகராறு: இருதரப்பை சேர்ந்த 100 பேர் மீது வழக்கு
    X

    திசையன்விளையில் பட்டாசு வெடித்த தகராறு: இருதரப்பை சேர்ந்த 100 பேர் மீது வழக்கு

    • பட்டாசு கிறிஸ்தவ ஆலயத்திற்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
    • ஜோபன் சாமுவேல் என்பவர் தட்டிக்கேட்கவே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த இடையன்குடி கல்லாம்பரம்பு பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழா நடந்து வருகிறது.

    இதையொட்டி நேற்று மதியம் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே வந்தபோது பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசு கிறிஸ்தவ ஆலயத்திற்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த ஜோபன் சாமுவேல் என்பவர் தட்டிக்கேட்கவே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஜோபன் சாமுவேல் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் மற்றும் பலர் அங்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ் குமார் மற்றும் உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஜோபன் சாமுவேலை மற்றொரு தரப்பினர் தாக்கியதாக அவரது மனைவி வின்சி ரெபேக்கா உவரி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் எதிர் தரப்பை சேர்ந்த நல்லமாடன், குமார், முத்துக்குமார், முருகன், வெள்ளச்சாமி, பாலகிருஷ்ணன் (வயது28) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். மற்ற 5 பேரும் போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவாகிவிட்டனர்.

    அதேநேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், ஊர்வலமாக சென்று போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் இன்ஸ்பெக்டர் பிரேமா அளித்த புகாரின்பேரில் 2 தரப்பையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×