search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.கே.புரம் பகுதியில் தினமும் அட்டகாசம்- குரங்கு கடித்துக்குதறிய சிறுவனுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
    X
    குரங்கு கடித்ததில் படுகாயம் அடைந்த சிறுவன் கவின்.

    வி.கே.புரம் பகுதியில் தினமும் அட்டகாசம்- குரங்கு கடித்துக்குதறிய சிறுவனுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

    • தினமும் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் செல்லும் கவின் நேற்றும் காலையில் பள்ளிக்கு புறப்பட்டான்.
    • கவின் வீட்டை தாண்டி சிறிது தொலைவில் செல்லவும், திடீரென்று வெள்ளை மந்தி(குரங்கு) ஒன்று அவன் மீது பாய்ந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள வடக்கு அகஸ்தியர்புரம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கவின் (வயது 14).

    இவன் வி.கே.புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் செல்லும் கவின் நேற்றும் காலையில் பள்ளிக்கு புறப்பட்டான். அவனது வீட்டை தாண்டி சிறிது தொலைவில் செல்லவும், திடீரென்று வெள்ளை மந்தி(குரங்கு) ஒன்று அவன் மீது பாய்ந்தது.

    அந்த குரங்கு அவனது வலது காலை பிடித்து, கடித்துக் குதறியது. அட்டை பூச்சியை போல ஒட்டிக்கொண்டு விடவில்லை. வலி தாங்க முடியாமல் சிறுவன் கவின் அலறி துடிக்கவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குரங்கை கம்பால் அடித்து உதைத்தனர். இதனால் குரங்கு அங்கிருந்து ஓடியது.

    படுகாயம் அடைந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே வனத்துறை சார்பில் சம்பவம் நடந்த வடக்கு அகஸ்தியர்புரத்திற்கு அருகே கோட்டைவிளைப்பட்டியில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்திற்கு அருகே கூண்டு ஒன்று நேற்று இரவு வைக்கப்பட்டது. அந்த கூண்டில் வாழைப்பழம் உள்ளிட்டவற்றை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை அந்த கூண்டில் 12 குரங்குகள் சிக்கின.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், 'வடக்கு அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி சுமார் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் நடமாடி வருகின்றன. இந்த குரங்குகள் உணவுக்காக வரும்போது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்ற மாணவனை குரங்கு கடித்து குதறியுள்ளது. வனத்துறையினர் கூண்டு வைத்து 12 குரங்குகளை பிடித்துள்ளனர். இன்னும் மீதம் உள்ள குரங்குகளையும் பிடிக்க வேண்டும். எங்களுக்கு வெளியில் நடமாடவே பயமாக உள்ளது.

    கரடி, யானை ஆகியவற்றுக்கு பயந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது குரங்கு தொல்லையாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம். தற்போது பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.

    Next Story
    ×