search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால்பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்
    X

    பால்பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்

    • பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் உருவான தீயானது மளமளவென்று பரவி வீட்டின் உள்பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் பற்றியது.
    • அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சுமதி (வயது 37). கணவர் இறந்துவிட்ட நிலையில் சுமதி அப்பகுதியில் சொந்தமாக பால்பண்ண வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் மேலும் சிலர் பால்பண்ணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுமதியின் வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென்று சுமதியின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சத்தம் கேட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சுமதி பதறியடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்தார்.

    அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் உருவான தீயானது மளமளவென்று பரவி வீட்டின் உள்பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் பற்றியது. இதில் அந்த வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. 2 மோட்டார் சைக்கிள்களும் எலும்பு கூடாக காட்சியளித்தது. இதைபார்த்த சுமதி மயங்கி விழுந்தார்.

    இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் வீட்டிற்குள் மயங்கி கிடந்த சுமதியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டியில் யாராவது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது வேறு காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×