search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீடு


    பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் கொள்ளை

    • வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பெருந்துறை:

    உத்தரபிரதேசம் மாநிலம் பர்க்காபாத் மாவட்டம் ஆவாஸ் விகாஸ் பகுதியை சேர்ந்தவர் அமித்குமார் (வயது 48).

    இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வள்ளிபுரத்தான் பாளையம் திருப்பதி கார்டனில் குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார். மேலும் அவர் அங்குள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி ஹோமாலினி. இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அமித் குமார் கடந்த 10-ந் தேதி தீபாவளி கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் சொந்த ஊரான உத்தரபிரதேசம் மாநிலம் பர்க்காபாத் மாவட்டம் ஆவாஸ் விகாஸ்க்கு சென்று விட்டார்.

    இதையடுத்து அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வள்ளிபுரத்தான் பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் துணிகள் சிதறி கிடந்தது. மேலும் பொருட்களின் மேல் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இதனால் கொள்ளையர்கள் மாட்டி கொள்ளாமல் இருக்க அவர்கள் மிளகாய் பொடி தூவி சென்று இருக்கலாம் என தெரிகிறது.

    மேலும் அங்கு வைத்து இருந்த 4 பவுன் தாலி செயின், 2 பவுன் வைர தாலி செயின், 2 பவுன் காது தோடு செட், ஒன்றரை பவுன் மோதிரம் என மொத்தம் ஒன்பதரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு தகவல்கள் சேரிக்கப்பட்டன. அதே போல் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் கொள்ளையர்கள் மிளகாய் பொடி தூவி விட்டு சென்று உள்ளதால் அவர்கள் திட்டம் போட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகக்கபடுகிறது. மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×