என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடிவேலு சினிமா பாணியில் வீடுகளை பூட்டிவிட்டு அடகு கடையில் லட்சக்கணக்கான நகை கொள்ளை
- கடையில் திருடுவதற்கான மர்ம நபர்கள் வந்தனர்.
- கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.
ஆம்பூர்:
நடிகர் வடிவேலு நடித்த சினிமா ஒன்றில் தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பூட்டு போட்டு விட்டு ஒரு வீட்டில் மட்டும் திருட செல்வார்கள் அப்போது தான் சத்தம் கேட்டு மற்றவர்களால் வர முடியாது என வடிவேலு கூறுவார். அதேபோல திருட்டு சம்பவம் ஆம்பூர் அருகே நடந்துள்ளது.
ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சரவணன் (வயது 35). அவர் வீட்டின் அருகே அடகு கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இந்த கடையில் திருடுவதற்கான மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கடையின் அருகே இருந்த 10 வீடுகளில் இருந்து ஆட்கள் வராமல் இருக்க அந்த வீடுகளில் உள்ள கதவுகளில் வெளிதாட்பாள் போட்டு பூட்டினர்.
அதற்கு பிறகு கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.
வெளிதாட்பாள் போட்டிருந்த வீட்டின் உரிமையாளர்கள் சுவர்ஏறி குதித்து வெளியே வந்தனர்.
அப்போது அடகு கடை பூட்டு உடைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.டி.எஸ்.பி சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து சோதனை நடத்தினர். மோப்ப நாய் கடையில் இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.