search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் காசி தமிழ் சங்கமம் பயணி மயங்கி விழுந்து பலி
    X

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் காசி தமிழ் சங்கமம் பயணி மயங்கி விழுந்து பலி

    • காசி தமிழ் சங்கமம் பயணத்தில் பங்கேற்ற செல்வகுமாருக்கு ஏற்கனவே இருதய ஆபரேசன் செய்யப்பட்டு இருந்தது.
    • திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் செல்வகுமார் உயிர் இழந்துள்ளார்.

    சென்னை:

    காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து சிறப்பு ரெயில்களில் பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

    உணவு, தங்குமிடம், ரெயில் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்கள் இல்லாமல் முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

    பல்வேறு கட்டமாக அழைத்து செல்லப்பட்ட பயணிகள் காசி, தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் சில சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு தமிழகம் திரும்பி வருகின்றனர். காசியில் இருந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் வழியாக வரும் ரெயில்களில் அவர்கள் திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு காசியில் இருந்து பாட்லி புத்ரா ரெயிலில் 216 பயணிகள் சென்ட்ரல் வந்து சேர்த்தனர். மாலையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் அவர்கள் திருநெல்வேலி செல்வதற்கு காத்திருப்போர் பகுதியில் காத்து இருந்தனர்.

    அப்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த செல்வகுமார் (54) என்பவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அவர் உடனடியாக பெரும்பாக்கத்தில் உள்ள தம்பிக்கு போன் செய்து வரச்சொல்லி இருக்கிறார். அவர் வந்து சேருவதற்குள் செல்வகுமார் மயங்கி கீழே விழுந்தார்.

    உடனடியாக அவரை அங்குள்ள மருத்துவ உதவி மையத்தில் சேர்த்து டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று காலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    காசி தமிழ் சங்கமம் பயணத்தில் பங்கேற்ற செல்வகுமாருக்கு ஏற்கனவே இருதய ஆபரேசன் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிர் இழந்துள்ளார்.

    இதுகுறித்து சென்ட்ரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×