என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி மாணவன் பலி- தேங்காய் பறிக்க அழைத்து சென்ற ஐ.டி.ஐ. ஆசிரியர் கைது
    X

    மின்சாரம் தாக்கி மாணவன் பலி- தேங்காய் பறிக்க அழைத்து சென்ற ஐ.டி.ஐ. ஆசிரியர் கைது

    • மாணவன் அரசு ஏற்கனவே உயிர் இழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • ஐ.டி.ஐ. நிர்வாக இயக்குனரை கைது செய்யவேண்டும் என்று உறவினர்கள் கோஷம்போட்டனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் அரசு (வயது 17). பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாமண்டு எலக்ட்ரீசன் படித்து வந்தார். அதே ஐ.டி.ஐ.யில் பணிபுரியும் ஆசிரியர் பிரபாகரன்.

    இவர் ஒரையூரில் உள்ள உறவினர் வீட்டு தோட்டத்தில் தேங்காய் பறிக்க ஐ.டி.ஐ. மாணவர்கள் அரசு, ஆதி (16). ஆகியோரை அழைத்து சென்றார். அப்போது ஆதி தென்னைமரத்தில் ஏறி தேங்காய்களை பறித்து கீழே போட்டார். இதனை மாணவர் அரசு சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது தேங்காய் கொத்தாக மின் வயர்மீது விழுந்தது. இதனால் மின்வயர் அறுந்து மாணவர் அரசு மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் ஆசிரியர் பிரபாகரன் மற்றும் மாணவர் ஆதி அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீபோல பரவியது. உடனடியாக மாணவனை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவன் அரசு ஏற்கனவே உயிர் இழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனை அறிந்த மாணவன் அரசின் பெற்றோர் ஆத்திரமடைந்தனர். அவர்கள் கதறி அழுது பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் செய்தனர். தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் டி.எஸ்.பி.சபிபுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மறியல் செய்தவர்களை கலைந்துபோக கூறினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து மாணவன் அரசு உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென ஐ.டி.ஐ. முன்பு திரண்டனர். அங்கு ஆசிரியர் பிரபாகரனை உடனே கைது செய்ய வேண்டும். மாணவன் இறப்புக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று கூறி மறியல் செய்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து ஐ.டி.ஐ. ஆசிரியர் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் மறியல் கைவிடப்பட்டது. எனினும் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    என்றாலும் ஐ.டி.ஐ. நிர்வாக இயக்குனரை கைது செய்யவேண்டும் என்று உறவினர்கள் கோஷம்போட்டனர். இதனைத் தொடர்ந்து ஐ.டி.ஐ. நிறுவனத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    Next Story
    ×