search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.டி.பி. தகராறில் கொலை- என்ஜினீயர் கீழே விழுந்ததும் மார்பில் பலமுறை எட்டி மிதித்ததால் உயிரிழந்த பரிதாபம்
    X

    மனைவி, குழந்தைகளுடன் என்ஜினீயர் உமேந்தர்.


    ஓ.டி.பி. தகராறில் கொலை- என்ஜினீயர் கீழே விழுந்ததும் மார்பில் பலமுறை எட்டி மிதித்ததால் உயிரிழந்த பரிதாபம்

    • கார் வந்ததும் முன்பதிவுக்கான ஓ.டி.பி. எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இந்த மோதலில் உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூர்:

    கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரில் வசித்து வந்தவர் உமேந்தர்(வயது33). சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் உமேந்தர் குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். மாலையில் அவர்கள் மாமல்லபுரம் சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக வாடகை காரை ஓலா அப் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர்.

    வணிக வளாகம் முன்பு கார் வந்ததும் முன்பதிவுக்கான ஓ.டி.பி. எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலில் உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான ரவியை கைது செய்தனர்.

    இவரது சொந்த ஊர் சேலம் ஆத்தூர் ஆகும். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    உமேந்தர் தன்னுடன் வந்த மனைவியின் அக்காள் தேவிப்பிரியாவின் செல்போனில் இருந்து காரை முன்பதிவு செய்து இருந்தார். காரில் அனைவரும் ஏறியதும் டிரைவர் ரவி ஓ.டி.பி எண்ணை கேட்டு அவசரப்படுத்தினார்.

    அப்போது உமேந்தர் தனது செல்போனில் ஓ.டி.பி எண்ணை தேடி தடுமாறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த டிரைவர் ரவி கடுமையான வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

    இதையடுத்து உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் சவாரியை கேன்சல் செய்யும்படி கூறிவிட்டு காரில் இருந்து இறங்கினர். அப்போது காரின் கதவை உமேந்தர் வேகமாக மூடியதாக கூறப்படுகிறது.

    இதனால் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். உமேந்தர் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலால் தாக்க முயன்றபோது தடுத்த டிரைவர் ரவி தனது கையில் இருந்த செல்போனால் அவரது தலையில் காது ஓரத்தில் பலமாக குத்தினார்.

    இதில் நிலைகுலைந்த உமேந்தர் கீழே விழுந்ததும் அவரது மார்பில் பலமுறை எட்டி உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த உமேந்தர் இறந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    மனைவி, குழந்தைகள் கண்முன்பே உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இதனை கண்டு அவர்கள் துடித்து போய் உள்ளனர்.

    சாதாரண வாக்குவாதத்தில் ஆத்திரம் கண்ணை மறைத்ததால் இந்த கொலை நடந்து உள்ளது. இதனால் என்ஜினீயரின் குடும்பமே நிலைகுலைந்து போய் இருக்கிறது.

    Next Story
    ×