search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் இன்று காலை தந்தை-மகனை அரிவாளால் வெட்டி ரூ.30 லட்சம் கொள்ளை- 3 பேரை கைது
    X

    ஊட்டியில் இன்று காலை தந்தை-மகனை அரிவாளால் வெட்டி ரூ.30 லட்சம் கொள்ளை- 3 பேரை கைது

    திருச்சி அருகே மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் யுவராஜ்.

    ஊட்டி:

    திருச்சி அருகே மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது55). இவரது மகன் யுவராஜ்(25).

    தந்தை, மகனான இவர்கள் 2 பேரும் ஊட்டியில் இருந்து திருச்சிக்கு காய்கறி அனுப்பும் வியாபாரிகளுக்கு சேர வேண்டிய பணத்தை திருச்சியில் வசூல் செய்து ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊட்டிக்கு வந்து பட்டுவாடா செய்வது வழக்கம்.

    வழக்கம்போல் இன்று வியாபாரிகளுக்கு பணம் பட்டுவாடா கொடுப்பதற்காக தங்கராஜ், தனது மகனுடன் நேற்று இரவே திருச்சியில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார். அப்போது கையில் திருச்சியில் வசூலித்த ரூ.30 லட்சம் பணமும் வைத்திருந்தார்.

    இன்று அதிகாலை 5.45 மணிக்கு தங்கராஜூம், யுவராஜூம், ஊட்டிக்கு வந்தனர். பஸ் நிலையத்தில் இருந்து, ஊட்டி மார்க்கெட் பகுதிக்கு நடந்து சென்றனர். ஊட்டியின் மையப்பகுதியான மார்கெட்மணிகூண்டு அருகே சென்றபோது, அவர்களின் பின்னால் கார் ஒன்று வேகமாக வந்து 2 பேரையும் மறித்தது.

    அதில் இருந்து மர்மநபர்கள் சிலர் திபுதிபுவென கீழே இறங்கி, தங்கராஜின் அருகே சென்றனர். பின்னர் ஆட்கள் யாராவது வருகிறார்களா? என பார்த்தனர்.

    அந்த சமயம் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்து கொண்ட அந்த கும்பலை சேர்ந்தவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவர்களை வெட்டினர். பின்னர் அந்த கும்பல், வியாபாரிகள் வைத்திருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு தாங்கள் வந்த காரில் தப்பியோடினர்.

    இதில் தந்தை, மகன் 2 பேரும் உடலின் பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டதால் வலியால் அலறி துடித்தனர். இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து, ஊட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வியாபாரிகளை வெட்டிய கும்பல் குறித்து விசாரணையை தொடங்கினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அந்த வழியாக வந்த வெளிமாநில, வெளிமாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ஒரு கார் வந்தது. அந்த காரில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முராணவே பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வியாபாரிகளை அரிவாளால் வெட்டி விட்டு, பணத்தை தப்பிய கும்பல் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வியாபாரிகளை பஸ்சில் ஒரு கும்பலும், காரில் ஒரு கும்பலும் பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் இந்த 3 பேருடன் வேறு சிலருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் வியாபாரிகளான தந்தை,மகனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி பணம் பறித்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×