search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.45 லட்சம் இழந்த வங்கி அதிகாரி
    X

    ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.45 லட்சம் இழந்த வங்கி அதிகாரி

    • வேலை காரணமாக காட்பாடிக்கு பணியிட மாறுதலாகி வந்த யோகேஸ்வர பாண்டியன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
    • தனிமையில் இருந்த யோகேஸ்வர பாண்டியன் பொழுது போக்கிற்காக ஆரம்ப கட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கல்வி கடன் வழங்கும் கிளை இயங்கி வருகிறது. இங்கு விருதுநகரை சேர்ந்த மதிமுத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் (வயது38). உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் காட்பாடி வி.ஜிராவ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். அதனை ஈடு கட்டுவதற்காக வங்கியில் கல்வி கடன் வாங்கிய மாணவ மாணவிகள் தவணை செலுத்திய இன்சூரன்ஸ் பிரீமியம் பணம் மற்றும் சிலரின் கல்விக் கடனை கையாடல் செய்து அந்த பணத்தை யோகேஸ்வர பாண்டியன் தனது 2 வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.

    இது பற்றிய தகவல் தெரியவந்ததும் வங்கி மேலாளர் சிவக்குமார் ஆய்வு செய்தார். அப்போது யோகேஸ்வரபாண்டியன் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 137 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622 கையாடல் செய்தது தெரிய வந்தது.

    புகாரின் பேரில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வர பாண்டியனை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    விருதுநகரை சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் நல்ல குடும்பப் பின்னணியில் உள்ளவர். இவருடைய மனைவி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    வேலை காரணமாக காட்பாடிக்கு பணியிட மாறுதலாகி வந்த யோகேஸ்வர பாண்டியன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

    தனிமையில் இருந்த அவர் பொழுது போக்கிற்காக ஆரம்ப கட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார். முதலில் சிறிய அளவில் பணத்தை செலுத்தினார். பின்னர் விட்ட பணத்தை பிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக பெரிய தொகைகளை செலுத்த ஆரம்பித்தார்.

    ஆன்லைனில் மூழ்கி அடிமையான அவர் மீள முடியாமல் வேலை பார்த்த இடத்திலும் பணத்தை கையாடல் செய்ய துணிந்தார். அதன்படி வாங்கி வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து ரூ.34 லட்சம் கையாடல் செய்து ரம்மி விளையாடியுள்ளார்.

    அந்த பணத்தை அதில் இழந்தார். மேலும் அவர் தனது சொந்த பணம் ரூ.10 லட்சம் ரம்மி விளையாட்டில் இழந்ததாக தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் ரூ.45 லட்சம் வரை அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார்.

    தான் தவறு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தவறுக்கு தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் என்ன செய்வது என அவர் மனம் வருந்தினார்.

    தற்போது அவரது வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டு விட்டது. நல்ல நிலையில் இருந்த அவர் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ரம்மி விளையாட்டு போன்றவற்றில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×