என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே யானை மிதித்து விவசாயி பலி
    X

    ஒட்டன்சத்திரம் அருகே யானை மிதித்து விவசாயி பலி

    • கோடை காலங்களில் குடிநீர் மற்றும் தண்ணீர் தேடி யானைகள் இது போல் இடம்பெயர்வதால் விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.
    • ஒரே வாரத்தில் 2-வது சம்பவமாக மீண்டும் ஒரு விவசாயி உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் அடிக்கடி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. கோம்பை, பழனி, தாசரிப்பட்டி, புதுக்கோட்டை, வடகாடு, பாச்சலூர் வழியாக பரப்பலாறு அணை வரை வந்து சேதப்படுத்தி விடுகின்றன. குறிப்பாக கோடை காலங்களில் குடிநீர் மற்றும் தண்ணீர் தேடி யானைகள் இது போல் இடம்பெயர்வதால் விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (50). இவர் தனது தோட்டத்து வீட்டில் தங்கி இருந்தபோது உள்ளே புகுந்த யானை பயிர்களை சேதப்படுத்தியது. இதைப் பார்த்ததும் யானையை விரட்ட முயன்றார். உடனே ஆவேசமடைந்த யானை அவரை தும்பிக்கையால் தூக்கி கீழே வீசி மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்ற போது பொதுமக்கள் தடுத்து கோஷமிட்டனர்.

    விவசாயி இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதிகாரிகள் உறுதியளிக்கும்வரை உடலை எடுக்க விடமாட்டோம் என்று ஆவேசமாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சமாதானம் செய்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராமபட்டினம் புதூரில் கடந்த 5-ந் தேதி அதிகாலையில் யானை மிதித்து தண்டபாணி (52) என்பவர் உயிரிழந்தார். ஒரே வாரத்தில் 2-வது சம்பவமாக மீண்டும் ஒரு விவசாயி உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×