search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் சாராயம் கடத்த புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய பலே ஆசாமி
    X

    பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களை படத்தில் காணலாம்.


    தமிழகத்தில் சாராயம் கடத்த புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய பலே ஆசாமி

    • உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பஸ் ஸ்டாண்ட் எதிரே மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனை நடத்தினார்.
    • அப்போது அவ்வழியே வந்த நபர் போலீசாரை கண்டதும் மோட்டார்சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பியோட முயன்றான். போலீசார் அவனை மடக்கிப்பிடித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் அரசு மருத்துவமனை, சட்டபேரவை, கடற்கரை, பூங்கா, விடுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடந்த 3 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருடுபோனது.

    ஒரே நாளில் 4,5 இடங்களில் வாகனங்கள் திருடப்பட்டது. கோரிமேடு, முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, பெரியகடை, ஒதியஞ்சாலை என நகரின் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வாகனங்கள் திருடப்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    ஒரே நபரே இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து திருடுபோன இடங்களுக்கு அருகில் இருந்த கண்காமிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது அரசு மருத்துவமனை அருகே 40 வயதுடைய ஒரு நபர் முன்வாசலில் செல்வதும், பின்னர் பின்வாசல் வழியாக வந்து நோட்டமிட்டு, ஒரு வாகனத்தை திருடி செல்வதும் பதிவாகியிருந்தது.

    இதே நபர் பல்வேறு இடங்களில் வாகன திருட்டிலும் ஈடுபட்டது கேமரா பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நபரின் போட்டோவை வைத்து போலீசார் ரகசியமாக புதுவை முழுவதும் சோதனை நடத்தினர்.

    உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பஸ் ஸ்டாண்ட் எதிரே மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனை நடத்தினார்.

    அப்போது அவ்வழியே வந்த நபர் போலீசாரை கண்டதும் மோட்டார்சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பியோட முயன்றான். போலீசார் அவனை மடக்கிப்பிடித்தனர். அப்போது அவன்தான் பலே வாகன திருடன் என தெரியவந்தது. விசாரணையில், அவன் வேலூர் மாவட்டம் ஆற்காடை சேர்ந்த சேகர் என்ற தனசேகர் (43) என்பதும், 3 மாதம் முன்பு வாகன திருட்டு வழக்கில் வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியவந்ததும் தெரியவந்தது.

    நாள்தோறும் வேலூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வரும் இவன், மக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்வான். எளிதில் திறக்க கூடியது, கூடுதல் பூட்டு போடாத வாகனங்களை தேர்வு செய்து திருடுவான். அதனை ஓட்டிச்சென்று புதுவை மாநில எல்லைகளில் நிறுத்தி விட்டு மீண்டும் பஸ்சில் ஏறி புதுவைக்கு வந்து மற்றொரு வாகனத்தை திருடுவான்.

    அதுபோல் ஒரே நாளில் 4 அல்லது 5 வாகனங்களை திருடிச் செல்வான். தமிழக பகுதியில் சாராயம் கடத்துவோரிடம் இந்த வாகனங்களை கிடைத்த விலைக்கு விற்று விட்டு இரவு சொந்த ஊருக்கு சென்று விடுவதை தினசரி வாடிக்கையாக வைத்திருந்த விசாரணையில் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையின்படி, தமிழகத்தில் பதுக்கிய 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    போலீசாரிடம் பலே திருடன், அனைத்து வாகன திருட்டையும் ஒரே வழக்காக பதிவு செய்து, விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யுங்கள். அப்போதுதான் நான் வழக்கை முடித்துவிட்டு வேறு ஊருக்கு செல்ல முடியும் என கூறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    தக்க ஆதாரங்களுடன் பிடிபட்டுள்ள பலே மோட்டார்சைக்கிள் திருடன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதேவேளையில் திருடனுக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பது வாகனங்களை பறிகொடுத்தவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

    Next Story
    ×