என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்- 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது
    X

    புதுவை தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்- 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

    • புதுவை மாநிலத்தில் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வேண்டும்.
    • ரேஷன் கடை ஊழியர்களை குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வேண்டும். மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும்.

    ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை தி.மு.க சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. மாநில அமைப்பாளருமான சிவா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், தி.மு.க. துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், சண். குமாரவேல், செந்தில்குமார், குணா திலீபன், பெல்லாரி கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் லோகையன்,

    சிறப்பு அழைப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், முகிலன், வடிவேல், சண்.சண்முகம், கோபாலகிருஷ்ணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் இதில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தி.மு.க. அமைப்பாளர் சிவா பேசியதாவது:-

    பெஸ்ட் புதுச்சேரி, 30 கிலோ அரிசி எதுவும் தேவையில்லை, ரேஷனில் 10 கிலோ அரிசியாவது வழங்க வேண்டும். ரேஷன் கடைகளை மூடியதற்கும், ஊழியர்களுக்கு சம்பளம் தராததற்கும் ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

    புதுவை கூட்டுறவு சொசைட்டி, பாப்ஸ்கோ மற்றும் தனியாரின் கீழ் 584 ரேஷன் கடைகள் உள்ளது. எந்த ரேஷன் கடைகளும் திறக்கவில்லை.

    ரேஷன் கடை ஊழியர்களுக்கு 4 ஆண்டாக இ.பி.எப். ரூ.12 கோடி, இ.எஸ்.ஐ. ரூ.3.5 கோடி, கிராஜுவிட்டி ரூ.3.6 கோடி செலுத்தவில்லை. அவர்களது சம்பளத்தையும் சேர்த்து ரூ.60 கோடி ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடன்காரனாக அரசு உள்ளது.

    ரேஷன் கடை ஊழியர்களுக்கு இ.பி.எப்., இ.எஸ்.ஐ. கட்டாததற்காக தலைமை செயலர், நிதி செயலர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களை குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    மக்களுக்கு நேரடியாக சேவை செய்யக்கூடியவர்கள் ரேஷன் கடை ஊழியர்கள். ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்பது புதுவை மக்களின் உரிமைக்குரல். மக்கள் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம்தான் அத்தியாவசியம். எனவே ரேஷன் கடைகளை திறந்து அரிசியை வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து எதிர்கட்சித்தலைவர் சிவா, 2 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×