என் மலர்
உள்ளூர் செய்திகள்

காசிமேடு கடலில் பருவமழை முன் எச்சரிக்கை ஒத்திகை
- கடலில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை தீயணைப்பு படையினர் மீட்பு படையினர் ஸ்கூபா டைவ் மற்றும் உடனடி மீட்பு அதிவிரைவு வீரர்கள் எப்படி மீட்கின்றனர் என்று நிகழ்த்தி காட்டினர்.
- ராயபுர சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
ராயபுரம்:
வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதையொட்டி தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சி காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் கடலில் நடைபெற்றது.
இதில் மெரினா நீச்சல் வீரர்கள், தீயணைப்பு துறையினரோடு சேர்ந்து வீட்டில் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பெரிய பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள், பெரிய டயர்கள், கட்டைகள், தெர்மாகோல்கள் போன்ற எளிதில் கிடைக்ககூடிய பொருட்களை வைத்தே பேரிடர் காலங்களில் எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது என்பது குறித்து செய்து காட்டினர்.
மேலும் கடலில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை தீயணைப்பு படையினர் மீட்பு படையினர் ஸ்கூபா டைவ் மற்றும் உடனடி மீட்பு அதிவிரைவு வீரர்கள் எப்படி மீட்கின்றனர் என்று நிகழ்த்தி காட்டினர். இது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படவைத்தது. இதில் ராயபுர சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள்,மீனவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஐட்ரீம் மூர்த்தி நிருபர்களிடம் கூறும்போது, போஜராஜன் கண்ணன் சுரங்கப்பாதை குறித்து ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதற்கு நான் ஏற்கனவே பதிலடி கொடுத்துள்ளேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராயபுரத்தில் தோல்வியுற்றுள்ளார். தேர்தலில் தோல்வி எதிரொலியாக அவர் மைக்மேனியா நோயோடு சேர்ந்து மனக்குழப்பத்திற்கு ஆளாகி இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காததால் அ.தி.மு.க.வை இரண்டாக உடைத்த ஜெயக்குமார் மீது அக்கட்சி தொண்டர்களே கடுமையான கோபத்தில் உள்ளனர். ராயபுரம் பகுதியை பொறுத்தவரை தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருந்தாலும் அந்த அளவிற்கான பாதிப்பு தற்போது ஏற்பட வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.