என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண இரட்டிப்பு மோசடியில் 2 பேர் கைது: சென்னை தொழிலதிபரை வலையில் வீழ்த்தியது எப்படி?- பரபரப்பு தகவல்கள்
- வெள்ளையப்பன் தான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் முருகராஜ் உள்பட பலரிடம் பணம் பெற்று ரூ.60 லட்சத்தை தயார் செய்தார்.
- பண ரெட்டிப்பு மோசடியில் வெள்ளையப்பன், முருகராஜ் ஆகியோர் ஏற்கனவே முதல் தவணையாக ரூ.10 லட்சம் கொடுத்து ரூ.12 லட்சம் பெற்றுச் சென்றுள்ளனர்.
வருசநாடு:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள பண்ணையார்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (வயது42). இவர் சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் தனியார் நிறுவன மேலாளராக உள்ளார்.
இந்த கம்பெனியில் விஜயகுமார், கோவிந்தன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் கடந்த மாதம் வெள்ளையப்பனை சந்தித்தனர். அவர்கள் தேனியில் ஒரு பிரபல தொழிலதிபர் உள்ளார்.
அவரிடம் அதிக அளவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளது. அதனை வங்கியில் செலுத்த முடியாமல் உள்ளார். ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு ரூ.2500 பணம் தருகிறார் என கூறி உள்ளார். இதனை நம்பி கடந்த மாதம் அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த யுவன், கார்த்திக், சண்முகம் ஆகியோரிடம் பேசி உள்ளதாகவும், அவர்கள் ரூ.60 லட்சத்துக்கு ரூ.500 நோட்டுகளாக கொடுத்தால் ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக ரூ.75 லட்சம் தருவார்கள் என வெள்ளையப்பனிடம் கூறி உள்ளனர்.
இதனை நம்பி வெள்ளையப்பன் தான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் முருகராஜ் உள்பட பலரிடம் பணம் பெற்று ரூ.60 லட்சத்தை தயார் செய்தார்.
பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த 4ந் தேதி வெள்ளையப்பன், முருகராஜ், மணிமாறன் ஆகியோர் சென்னையில் இருந்து ஒரு காரில் தேனிக்கு வந்தனர். மறுநாள் காலையில் தேனி புது பஸ்டாண்டுக்கு வெள்ளையப்பன் சென்றார்.
அங்கு காத்திருந்த விஜயகுமார், கோவிந்தன் ஆகியோர் அவர்களை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு பேக்கரிக்கு அழைத்துச் சென்றனர். வீரபாண்டியை சேர்ந்த யுவன், கார்த்திக், சண்முகம் ஆகியோர் தனித்தனியாக அங்கு சென்று வெள்ளையப்பன், முருகராஜை சந்தித்தனர்.
அவர்கள் ரூ.60 லட்சம் கொண்டு வந்ததை உறுதி செய்து கொண்டு அருகே உள்ள தோட்டத்து பங்களாவுக்கு அழைத்து சென்றனர். அங்கு செல்வதற்கு வெள்ளையப்பன், முருகராஜ் வந்த சென்னை பதிவு எண் கொண்ட வாகனத்தை பயன்படுத்தக்கூடாது என கூறி வேறு ஒரு காரில் கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் பணத்தை பறித்துக் கொண்டு அவர்களை கடுமையாக தாக்கி 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து தப்பி வந்த வெள்ளையப்பன், முருகராஜ் ஆகியோர் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவன் மற்றும் கார்த்திக்கை கைது செய்து சண்முகத்தை தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ.2.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.20 லட்சத்துக்கான சொத்து பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 2 கார்களும் கைப்பற்றபட்டது.
பண ரெட்டிப்பு மோசடியில் வெள்ளையப்பன், முருகராஜ் ஆகியோர் ஏற்கனவே முதல் தவணையாக ரூ.10 லட்சம் கொடுத்து ரூ.12 லட்சம் பெற்றுச் சென்றுள்ளனர். அந்த ஆசையில்தான் கூடுதலாக பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனக்கு தெரிந்த நபர்களிடம் பணம் திரட்டி ரூ.60 லட்சத்தை கொண்டு வந்து அதனை பறிகொடுத்து சென்றுள்ளனர்.
முதலில் பணம் கொடுப்பதுபோல ஆசை வார்த்தை கூறி பின்னர் மொத்தமாக பணத்தை அபகரித்த இந்த கும்பல் வேறு யாரிடமும் இதேபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






