search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வாலிபால் போட்டி: அமைச்சர் தொடங்கி வைத்து தரையில் அமர்ந்து விளையாடினார்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வாலிபால் போட்டி: அமைச்சர் தொடங்கி வைத்து தரையில் அமர்ந்து விளையாடினார்

    • 10ம் மற்றும் 12ம் பொதுத்தேர்வு எழுத கூடிய மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், தைரியத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
    • உங்களுக்காக தான் இந்த அரசாங்கம் உள்ளது. அவரவர் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கில் இந்திய பாராலிம்பிக் வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், ஐ.ஓ.பி., தஞ்சாவூர் மாநகராட்சி ஆகியவை இணைந்து அகில இந்திய அளவிலான 800 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 11-வது அகில இந்திய பாரா வாலிபால் போட்டிகள் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை நடத்துகிறது.

    இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 15 மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேசிய பாரா வாலிபால் போட்டி தஞ்சையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் வெற்றி பெறும் அணியை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான துறையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் தங்கள் வசமே வைத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கும் உத்வேகம் அளித்து சம வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். தற்போது விளையாட்டு துறைக்கான துடிப்பான அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் 10ம் மற்றும் 12ம் பொதுத்தேர்வு எழுத கூடிய மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், தைரியத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உங்களுக்காக தான் இந்த அரசாங்கம் உள்ளது. அவரவர் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான நாற்காலி காத்து கொண்டு இருக்கிறது. தற்போது டெல்டாவில் அறுவடை நேரத்தில் கனமழை பெய்துள்ளது. பாதிப்புகான கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் விபரம் வந்த பின்னர் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    பின்னர் விளையாட்டு அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டி நடைபெறும் களத்திற்குள் சென்று மாற்றுத்திறனாளி போட்டியாளர்களுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடன் தரையில் அமர்ந்தவாறு பாரா வாலிபால் போட்டியை துவக்கி வைத்து விளையாடினார்.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். முன்னாள் தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநில தலைவர் டாக்டர் மக்கள் ஜி.ராஜன் வரவேற்றார்.

    இந்தப் போட்டியிலிருந்து வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உலக அளவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×