என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரி தொகுதியில் பெரும்பாலான கடைகள் அடைப்பு- இந்து முன்னணி நிர்வாகிகள் 18 பேர் கைது
- வியாபாரிகள் கடைகளை அடைத்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- இந்து முன்னணி போராட்டம் காரணமாக நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊட்டி:
தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற தொகுதி எம்.பியுமாக இருப்பவர் ஆ.ராசா.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து அவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.
இது தொடர்பாக நீலகிரி பாராளுமன்ற தொகுதி முழுவதும் இந்து அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, வியாபாரிகளிடம் நோட்டீசு வினியோகம் செய்தனர். அதேசமயம் இந்து முன்னணியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் வழக்கம்போல் கடைகளை திறக்க வேண்டும் என தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரும் துண்டுபிரசுரம் வழங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்தநிலையில் இன்று இந்து முன்னணி அறிவிப்பின் படி நீலகிரி தொகுதியில் பல இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே கடைகள் திறக்கப்பட்டு இருந்தது.
கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பஜாரில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 4 கடைகள் மட்டுமே திறந்திருந்தது. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
கோத்தகிரி நகர பகுதிகளிலும் ஏராளமான கடைகள் மூடப்பட்டே கிடந்தன.
கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் 150க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இன்று காலை வியாபாரிகள் வழக்கம்போல் கடையை திறப்பதற்காக கடைக்கு வந்தனர். போலீசாரும் கடைகள் திறந்து கொள்ளுங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என தெரிவித்து சென்றனர். ஆனாலும் வியாபாரிகள் கடையை திறப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே உள்ளனர். இதனால் இதுவரை கோத்தகிரி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் திறக்காமல் மூடப்பட்டு இருக்கிறது.
குன்னூர் மார்க்கெட், மேல் குன்னூர், சிம்ஸ்பூங்கா, வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு, எலநள்ளி, சேலாஸ், தூதூர்மட்டம் உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதுதவிர இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குன்னூரில் தனியார் மினி பஸ்கள் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டதாலும், தனியார் பஸ்கள் இயங்காததாலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமம் அடைந்தனர்.
ஊட்டியில் 50 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன. கூடலூர் பஸ் நிலையம், ஊட்டி சாலை, மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தது. பந்தலூர், சேரம்பாடி என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகள் கோவை மாவட்டத்தில் வருகின்றன. அந்த பகுதியிலும் இன்று கடை அடைப்பு முழு அளவில் நடந்தது.
மேட்டுப்பாளையத்தில் இன்று காலை முதலே டீக்கடை, செல்போன் கடைகள், ஜவுளி கடைகள், உணவகங்கள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மார்க்கெட்டுகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டிருந்ததால் வெளியூரில் இருந்து பஸ்சில் மேட்டுப்பாளையத்திற்கு வந்தவர்கள், ரெயிலில் வந்தவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு உணவகங்கள் இல்லாததால் சிரமம் அடைந்தனர்.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் நகரமே கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி கிடந்தது. இதேபோன்று காரமடை, சிறுமுகை பகுதிகளிலும் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
அன்னூர், எஸ்.எஸ்.குளம் பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள் கடைகளை அடைத்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அன்னூர் மற்றும் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் முன்னணி செயலாளர் திவாகர், வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்து முன்னணி போராட்டம் காரணமாக நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் அடிக்கடி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.






